ராம்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சீக்கிரமே வெளியில் வர வேண்டும், இந்த பொய் வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என்று கூறியதாக ராம்குமாருடனான கடைசி சந்திப்பு குறித்து வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக சிறைத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியதாவது:-
ராம்குமாரை நான் கடைசியாக சிறையில் சந்தித்தபோது, அவர் சிறைக்குள் தற்கொலை செய்யும் அளவிற்கு மன அழுத்தத்தில் இல்லை. ராம்குமாருக்கு பொய்யான குற்றச்சாட்டில் சிறைக்குள் வந்துவிட்டோமே என்ற வருத்தம் மட்டுமே இருந்தது.
சீக்கிரமே வெளியில் வர வேண்டும், இந்த பொய் வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும், வாழ்கையில் பெரியாளாக வேண்டும் என பல ஆசைகளை வெளிப்படுத்தினார். அவர் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லவே இல்லை.
ராம்குமார் தற்கொலை செய்துக்கொண்டார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அவரை அடிக்கடி நேரில் சந்திக்கும் எனக்கு நன்றாக தெரியும். அவர் நல்ல மனநிலையில்தான் இருந்தார். சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அவரிடம் பேசும்போதெல்லாம், எனக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றுதான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவந்தார்.
ராம்குமார் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செயப்பட்டு, காவல்துறையினர் கூறி ஒருதலை காதல் கதை எல்லாம் பொய். ராம்குமாருக்கு சுவாதி யார் என்று தெரியாது. இத்தகவலை ராம்குமார் அவரது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.
இவ்வாறு வழக்கறிஞர் ராம்ராஜ் கூறினார். மேலும் ராம்குமார் கொலை செய்யப்பட்டதற்கு உரிய நியாயம் கிடைக்கும்வரை நான் ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.