முதலமைச்சர் மீது அவதூறு பரப்பியதாக கூறி சசிகலா புஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை துணை ஆனையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.யை தாக்கிய விவகாரத்தை அடுத்து சசிகலா புஷ்பா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, தன்னை முதலைமைச்சர் ஜெயலலிதா தாக்கியதாக பாராளுமன்றத்தில் புகார் அளித்திருந்தார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திருச்சி சட்டக்கல்லூரியில் முதுகலை சட்டப்படிப்பு படிக்கும் மாணவர் பாண்டியன் சார்பில் உச்சநீதிமன்ற வக்கீல் கிருஷ்ணமூர்த்தி திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், ’ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய சசிகலாபுஷ்பா எம்.பி. மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள சட்டக்கல்லூரி மாணவர் பாண்டியன், ”நான் பத்திரிகைகளை படித்தேன். அப்போது சசிகலாபுஷ்பா எம்.பி., ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது எனது மனதை மிகவும் பாதித்தது.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளேன். இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடருவோம்” என்று தெரிவித்துள்ளார்.