மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சிலர் ஆதரவாக பதிவிட்டதற்கு மறைமுக கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ், திமுக கட்சிகள் அதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பூ புதிய கல்வி கொள்கையை வரவேற்பதாக கருத்து தெரிவித்திருந்தார். காங்கிரஸ் மொத்தமாக புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பேசி வரும் நிலையில், குஷ்பூ இதற்கு ஆதரவாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி “காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன் பெயர் முதிற்சியின்மை.” என்று கூறியுள்ளார். அவர் குஷ்பூவின் கருத்தை குறிப்பிட்டுதான் மறைமுகமாக அவ்வாறு கூறியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.