Publish Date: Fri, 11 Jun 2021 (12:18 IST)
Updated Date: Fri, 11 Jun 2021 (12:22 IST)
இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நடத்தியதை விட மோசமான ஆட்சியை பாஜக நடத்துவதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையில், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வேகமாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை 5 மாநில தேர்தலின் போது விலையேற்றம் காணாமல் ஒரே விலையில் நீடித்து வந்தது.
தற்போது மீண்டும் விலை உயர தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100 தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், விலைவாசி உயர்விற்கு வழிவகுப்பதாகவும் கூறியுள்ள காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ”இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நடத்திய ஆட்சியை விட மோசமான ஆட்சியை மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது.. பாஜக ஆட்சியில் பெட்ரோல் முதற்கொண்டு அனைத்தும் விலை உயர்ந்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.