கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வழக்கில் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில், இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த புகாரில் முக்கிய குற்றவாளியான போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் விஷம் அருந்தி உயிரிழந்தார். மேலும் சிவராமனின் தந்தையும் மரணம் அடைந்தார். விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே முக்கிய குற்றவாளி உயிரிழந்த விவகாரம் பலரது மத்தியில் சந்தேகத்தை எழுப்பியது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து உண்மைகளை கண்டறிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் மாணவியின் பெயரைத் தவிர்த்து மற்ற அனைத்து விவரங்களையும் கூறி மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தி விட்டதாக தெரிவித்தார்.
விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு கூட ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழ்நாடு அரசு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு எந்தவித நிவாரணமும் வழங்க வில்லை என வாதிட்டார். பள்ளி மாணவி பாலியல் வழக்கில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு இதுவரை முக்கிய குற்றவாளி உட்பட பள்ளி தாளாளர், பள்ளி முதலமைச்சர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பினர். மேலும் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி மீது அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதுவரையில் கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.