இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறயுள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இடமாற்றம் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரண்டு வியாபாரிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு காய்கறி, பழங்கள் சந்தையை மூன்றாக பிரித்து கேளம்பாக்கம், மாதவரம், கோயம்பேடுகளில் இயக்குவதற்கு நேற்று மாநகராட்சி ஆணையர் ஆலோசித்த நிலையில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆலோசனை கூட்டம் மீண்டும் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்பே சிறு மொத்த வியாபாரிகளை கேளம்பாக்கம் மற்றும் மாதவரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
மேலும், சிறு மொத்த வியாபாரிகளின் கடைகளை கோயம்பேடு சந்தையில் இயங்கவும், மொத்த வியாபாரிகளின் கடையை இடமாற்றம் செய்யவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அப்படி இல்லையென்றால் ஊரடங்கு காலம் நிறைவடையும் வரை விடுமுறை அறிவிக்க சிறு மொத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர் என தெரிகிறது.