தேனியில் கல்வெட்டில் ஓ பி ரவீந்தரநாத்தின் பெயருக்குப் பின்னால் எம்.பி. எனப் பொறிக்கப்பட்டதற்குக் காரணமானவரைக் காவல்துறைக் கைது செய்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வரும் மே 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னராகவே தேனி தொகுதியின் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் ஓ பி ரவீந்தரநாத் பெயருக்குப் பின் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என போடப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.
தேனி பகுதியில் உள்ள காசி அன்னபூரணி ஆலயத்திற்கு பேருதவி புரிந்ததாக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில்தான் ஓ பி ரவீந்தரநாத்தின் பெயருக்குப் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டுள்ளது. நேற்று சமூகவலைதளங்களில் இந்த கல்வெட்டின் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஓ பி ரவீந்தரநாத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.
இதனையடுத்து இன்று போலிஸார் வழக்குப் பதிவு செய்து கோவில் நிர்வாகியான வேல்முருகனைப் போலிஸார் கைது செய்துள்ளனர். கோயில் நிர்வாகியான வேல்முருகன் முன்னாள் காவலர் என்பதும் மெரினாப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற இவரது செயல்களால் காவல்துறையே இவருக்கு கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இவர் இவர் மீது 468, 470 ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.