கரூரில் கொடிகாத்த குமரன் பிறந்த தின விழாவினையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்திய செங்குந்த இளைஞர் பேரவை – திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் மற்றும் சமச்சீர் கல்வி தமிழ் பாட புத்தகத்தில் தியாகி குமரனின் வரலாற்றினை போற்றிடும் வகையில் இடம்பெற வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் 116 வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கரூர் காவல்நிலையம் அருகே உள்ள, தியாகி குமரன் சிலைக்கு இன்று செங்குந்தர் இளைஞர் பேரவையின் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில்., செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பில் திருப்பூர் குமரனின் திருவுருவச்சிலைக்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் உறுதி மொழி எடுத்துக் கொண்ட அந்த அமைப்பினர்., விரைவில் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமென்றும், சமச்சீர் கல்வி தமிழ் பாடப்புத்தகங்களில் தியாகி குமரன் அவர்களின் வரலாற்றினை போற்றும் வகையில், இடம்பெற வேண்டுமென்று கல்வித்துறை அமைச்சகத்தினை வலியுறுத்துகின்றோம் என்றும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்குந்தர் இளைஞர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் மோகன் பெரியசாமி, கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் செங்குந்த முதலியார் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நிலையில், அவரது திருவுருவச்சிலை அப்பகுதியில் அரசு அமைத்து தருவதோடு, அதே பகுதியில், அவரது பெயர் கொண்ட நுழைவு வாயில் ஒன்றிணை கட்ட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார். மேலும், கரூர் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர் பூங்கா அமைக்க வேண்டுமென்றும் அதற்கும் திருப்பூர் குமரனின் பெயரை வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகரும், செங்குந்த இளைஞர் பேரவை நிர்வாகி ஸ்டீபன் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.