அமிலமாக மாறும் கதிராமங்கலம் நிலத்தடி நீர்!
அமிலமாக மாறும் கதிராமங்கலம் நிலத்தடி நீர்!
கதிராமங்கலம் பகுதி நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அந்த பகுதி நீர் அமிலமாக மாறி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.
ஓஎன்ஜிசி எண்ணை நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலத்தில் பொதுமக்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் 12 இடங்களில் எண்ணை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக எண்ணை குழாய்களை மாற்றி வருகிறது ஓஎன்ஜிசி நிறுவனம். இதனால் எண்ணை கசிவு ஏற்பட்டு அந்த பகுதியின் குடிநீர் பாதிக்கப்பட்டு குடிநீரின் நிறம் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என அந்த பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கதிராமங்கலம் பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சீமான் அந்த பகுதி நிலத்தடி நீர் அமிலமாக மாறி வருவதாக கூறியுள்ளார். கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி தோண்டி உள்ள ஆழ்குழாய் கிணறுகளால் அந்த பகுதியின் நிலத்தடி நீராதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது. அப்பகுதி தண்ணீர் அமிலமாக மாறி வருகிறது.
அந்த தண்ணீரை ஒரு ஆய்வகத்தில் பரிசோதனை செய்துள்ளோம். இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எண்ணெய் எடுக்கும் திட்டப்பணியை தடுத்து நிறுத்துவோம் என்றார் சீமான்.