சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்தது போலவே, கரூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்தது.
கரூர் நகராட்சி அலட்சியம் கரூர் பேருந்து நிலையத்தில் கடைகள் முன்புள்ள மேற்கூரை இடிந்து விபத்து அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் தப்பியுள்ளனர். சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்து 7 பேர் பலியானதையடுத்தும், 12 பேர் படுகாயமடைந்ததையடுத்தும், இந்த விசாரணைக்காக ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்சிங் பேடி நேற்று தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், கரூரில் அதுவும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதியில், அமைச்சரின் ஊரில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரின் மைய பகுதியில் கரூர் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையம் மிகவும் நெரிசாலான பகுதியில் இந்த பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிலையத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அரசியல் காரணங்களால் பேருந்து நிலையம் மாற்றப்படவில்லை.
தற்போது போக்குவரத்து அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்ற கரூர் தொகுதியில் இருக்கும் முக்கிய பேருந்து நிலையம் இது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இந்த பேருந்து நிலையம் சரியான பரமரிப்பு இல்லாமல் இருப்பதுதான் வேதனையான செய்தி.
இந்த பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளின் முன்பு உள்ள மேற்கூரை மிகவும் பழுதடைந்துள்ளது. இன்று இரண்டு கடைகளின் முன்புள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால், பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். நல்லவேளையாக யாரும் காயம் அடையவில்லை.
உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி புதிய பேருந்து நிலையத்திற்காக, வேறு ஒரு இடத்தை தேர்வு செய்தும், அந்த இடத்தை அவர் தேர்வு செய்தார் என்பதற்காக இன்றும் எந்த வித பரமாரிப்பும் இல்லாமல் இருக்கிறது.
கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் கரூர் பேருந்து நிலையம் உள்ளதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அங்கே வந்து செல்கின்றனர்.