கருணாஸ் தரப்பில் கோரப்பட்ட முன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருக்கும் கருணாஸை, நெல்லை காவல் துணை காண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் கைது செய்ய முயற்சித்து வருகின்றனர்.
2017 ஆம் ஆண்டு நெல்லையில் தேவர் அமைப்பு நிர்வாகியின் கார் எரிக்கப்பட்ட வழக்கில் கருணாஸ் பெயரும் இருப்பதால் அந்த வழக்கில் அவரை கைது செய்ய முயற்சித்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை கருணாஸ் உடல் நலக்குறைவால் சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே கருணாஸ் தரப்பில் நேற்று முன்தினம் முன்ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை இன்று விசாரித்த நீதிமன்றம், கருணாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துவிட்டது.