தமிழகத்தில் திராவிடம் பற்றி பேசும் எல்லோரையும் நம்ப வேண்டாம் என திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோமாபுரி பாண்டியன் தொடரில் நடித்த நடிகர், நடிகைகளை பாராட்டு விழா நேற்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறும்போது “திராவிட இயக்கத்திற்கு என்று உறுதியான கொள்கைகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த கொள்கைகளைச் சொல்லிக் கொண்டு இயக்கத்தை நடத்துகின்றவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்துக்காரர்கள் என்று யாரும் நம்பி விட வேண்டாம்.
தந்தை பெரியார் காலத்திலே இருந்து இதுவரை இந்த இயக்கத்தை உண்மையிலேயே திமுகதான் வழி நடத்திச் செல்கிறது. ஏன் இந்த இயக்கத்திலே பீடு நடைபோடுகிறோம். பெருமித நடைக்குச் சொந்தக் காரர்களாக இருக்கிறோம் என்பதையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்த்து, இந்த நடை தொடர, இந்த எண்ணங்கள் மலர, இந்த இலட்சியங்கள் வெற்றி பெற அனைவரும் எங்களோடு இணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.