Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மொத்தமாகக் கணக்குத் தீர்க்க நேர்ந்து விடும் - எச்சரிக்கும் கருணாநிதி

மொத்தமாகக் கணக்குத் தீர்க்க நேர்ந்து விடும் - எச்சரிக்கும் கருணாநிதி
, செவ்வாய், 12 ஜூலை 2016 (20:36 IST)
மதுக்கடைகள் மூலம் எந்த அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் எமக்கென்ன என்று இறுமாந்து இருந்து விடுவார்களானால், எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்தமாகக் கணக்குத் தீர்த்திட வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு நேர்ந்து விடும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’நான் கடந்த 7ஆம் தேதி விடுத்த அறிக்கையில், தன் கையிலிருந்த தனது சம்பளப் பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய கொள்ளையனுடன் தைரியமாகப் போராடிய பள்ளி ஆசிரியை தள்ளி விடப்பட்டு செய்யப்பட்ட கொலை பற்றியும், இந்த விபத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரும் உயிர் இழந்தது பற்றியும், ஆசிரியையுடன் வந்த உறவுப் பெண் பலத்த காயமடைந்து மருத்துவ மனையிலே சிகிச்சை பெற்று வருவதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். 
 
ஆத்திரமடைந்த பொது மக்கள் காவல் நிலையத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அந்த இடத்திலே உள்ள  ஒரு டாஸ்மாக் மதுக்கடை தான் இப்படிப்பட்ட வன்முறைகளுக்குக் காரணமாக இருக்கிறது என்று கூறி, அந்த மதுக்கடையை மூடக் கோரி தினமும் ஒரு வார காலமாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த அரசோ அதைப் பற்றி யெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மதுக்கடையை மூட வேண்டுமென்று நடைபெற்ற போராட்டத்தில் தான் காந்தியவாதி சசிபெருமாள் இறக்க நேரிட்டது. பட்டினப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் மகளிருடன் சேர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.
 
பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையினர் டாஸ்மாக் கடைக்கு முன்னால்  குவிந்து, அந்தக் கடையைப் பாதுகாக்கும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளனர். அதிமுக அரசோ இந்தப் பிரச்சினை குறித்து வாயே திறக்கவில்லை. 
 
பொதுமக்களின் குரலுக்கு இனியாவது மதிப்பளித்து குறிப்பிட்ட மதுக்கடையை தமிழக அரசு உடனடியாக மூடுவது பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும் தாமதப்படுத்தப்பட்டால், இந்தப் போராட்டத்தின் காரணமாகத் தொடர்ந்து ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமானால் அதற்கும் இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
 
எந்த அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் எமக்கென்ன என்று இறுமாந்து இருந்து விடுவார்களானால், எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்தமாகக் கணக்குத் தீர்த்திட வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு நேர்ந்து விடும் என்பதை மறந்து விடக் கூடாது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக ஆட்சி வந்தவுடன் சட்டம், ஒழுங்கு மோசம் - ஜி. ராமகிருஷ்ணன்