இன்று தொடங்கிய தமிழக சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில், அதிமுக, திமுக இடையே கூச்சலும், குழப்பமும் நிலவி வருகிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 16-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர் 17-ஆம் தேதி மறைந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன் மொழியப்பட்டு, உறுப்பினர்கள் விவாதம் தொடங்கியது.
மேட்டூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ செம்மலை உரையை தொடங்கி வைத்து பேசும்போது முரண்பாட்டின் மொத்த உருவம் என திமுக தலைவர் கருணாநிதி பற்றி பேசியதால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.
இதனையடுத்து அவையில் திமுக, அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. கச்சத்தீவு விவகாரம் இன்றைய கூட்டத்தில் பிரச்சனையாக உருவெடுத்தது. இதில் இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டனர்.