காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று கூறி வரும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திற்குள் வரும் கர்நாடக மாநில பேருந்துகளும், கர்நாடகத்திற்குள் செல்லும் தமிழக பேருந்துகளும் ஒருவித அச்சத்துடனே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் செல்லும் கர்நாடக அரசு பேருந்து ஒன்று நேற்று திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பியது. இந்த பேருந்து கிரிவலப்பாதை வழியாக வந்தபோது மர்ம நபர்கள் சிலர் பேருந்தை கல்வீசி தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் மீண்டும் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு பேருந்தை ஓட்டி வந்து, பின்னர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார், பேருந்தை கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இதேபோல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.