Publish Date: Fri, 10 Aug 2018 (12:17 IST)
Updated Date: Fri, 10 Aug 2018 (12:18 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என தமிழக அரசு காட்டிய வேகத்தை ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு காட்டியிருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்த போது அவரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய திமுக கோரிக்கை வைத்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த தமிழக அரசு காமராஜர் நினைவிடம் அருகே உடம் கொடுப்பதாய் அறிவித்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுக்க, தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாகவே அமைந்தது.
இந்நிலையில், கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் “ வேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 22 மே அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.
வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில், முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30க்கு துவங்க இருந்த நிலையில், அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால், சிஎஸ்.வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.
கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிச்சாமி,அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால்,இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிச்சாமி,வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக்கொண்டிருக்கிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.