ஜல்லிக்கட்டு வேண்டி அமைதியான முறையில் போராடிய போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரத்தை நடிகர் கமல்ஹாசன் கண்டித்துள்ளார்.
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். சென்னையின் திருவல்லிக்கேனி, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர்.
அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது தவறு. நீதியின் காவலர்க்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சென்னையில் நடந்த வன்முறை அதிர்ச்சி அளிக்கிறது. எம்.ஜி.ஆர் இப்போது நம்மிடம் இருந்திருந்தால் போராட்டக்களத்திற்கு சென்றிருப்பார். உள்ளே செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் பின் வாங்கியிருக்க மாட்டார். போலீசார் எதிரே அமர்ந்து அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பார்.
ஜல்லிக்கட்டிற்காக அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது அரசியல் சாயம் பூசுவதை ஏற்க முடியாது. பெண்கள் கூட போராட்டத்தில் பாதுகாப்பாக இருந்தார்கள். அதை யாரும் மறைக்க முடியாது. இதுநாள் வரை இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் மனதில் இருந்த அதிருப்தியின் அடையாளம்தான் இந்த போராட்டம்” என அவர் கூறினார்.