அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவர் சந்தித்து பேசியுள்ளார்.
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார்.
அந்நிலையில், அவர் பல முக்கிய நபர்களை சந்தித்து சில ஆலோசனைகளை கேட்டு வருகிறார். தேர்தல் ஆணையத்தில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனை, அவரது இல்லத்திற்கு சென்று கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அதன் பின், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான செல்வராஜ், இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணநிதி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று மாலை 12.15 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவர் சந்தித்து பேசினார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “விஜயகாந்தை சந்தித்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. மேலும், அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க வேண்டிய கடமையும் எனக்கு இருந்தது. அதோடு, அரசியலில் மூத்தவர் என்பதால் விஜயகாந்தை சந்தித்து பேசினேன். அப்போது அவர் உங்களை போன்றவர்கள் வர வேண்டும் எனக் கூறினார்” என கமல்ஹாசன் கூறினார்.
அப்போது, இங்கு ஏராளமான திராவிடக் கட்சிகள் இருக்கிறது. நீங்களும் அதே கொள்கையோடு அரசியலில் இருங்கினால் வெற்றி பெற முடியுமா? என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு “ நான் வெற்றி பெறும் போது உங்களுக்கு அது புரியும்” எனக்கூ கமல் பதிலளித்தார்.