நயன்தாராவை விமர்சித்த ராதாரவியை திமுகவில் இருந்து நீக்கியது சரியான நடவடிக்கையே, அதற்கு பாரட்டுக்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்து பேசியதற்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன், சின்மயி உள்ளிட்ட பலர் பெண் என்றும் பாராமல் மிக மோசமான இந்த விமர்சனத்தை செய்த ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நடிகர் சங்கம் அவரை எச்சரித்துள்ளது. அதேபோல் திமுகவில் இருந்த ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியது கட்சி மேலிடம்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், பெண்களை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. நயன்தாரா விஷயத்தில் ராதாரவி அப்படி பேசியிருக்கக்கூடாது அதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக எடுத்த முடிவிற்கு எனது பாராட்டுக்கள் என தெரிவித்தார்.