நடிகரும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது கட்சியின் கொடியை ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் ஏற்றினார். மேலும் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்நிலைக்குழுவை கலைத்த கமல்ஹாசன் அதற்கு பதிலாக பொதுக்குழு உறுப்பினர்களை அறிவித்தார். அதுமட்டுமின்றி கட்சியின் தலைவராக தன்னையும் துணைத்தலைவராக திரு.ஞானசம்பந்தன் அவர்களையும், பொதுச்செயலாளராக திரு. அருணாச்சலம் அவர்களையும், பொருளாளராக திரு.சுரேஷ் அவர்களையும் கமல் நியமனம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று முழு அமாவாசை நல்ல நாளில் கமல்ஹாசன் தனது கட்சியில் அதிரடி மாற்றம் செய்துள்ளதாகவும், கட்சியின் கொடியை ஏற்றியதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து கருத்து கூறிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'மய்யம் என கட்சி ஆரம்பித்தவர் போலி பகுத்தறிவு உள்ளவர் என்றும், கட்சி தொடங்கியதும், கொடி ஏற்றியதும் அமாவாசையில் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழிசையின் இந்த கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும், கமல்ஹாசனின் ஆதரவாளர்களும் சமூக இணையதளங்கள் வாயிலாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.