விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது. இவ்வாறான வெற்றிகள் தமிழகம் தருகின்ற போதிலும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை வாயிலாக குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு… விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, பாஜக ஆளும் குஜராத்துக்கு ரூ.608 கோடியும், அதைவிட பெரிய மாநிலமான தமிழகத்துக்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது எவ்வகையிலும் நியாயமற்றது.
அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம், பீஹார், டெல்லி, ஹரியானா, இமாச்சல், கேரளா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களைவிட தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பயிற்சியாளர்களும் டெல்லிக்கு 121 பேர், அசாமுக்கு 56 பேரை பணியில் அமர்த்திவிட்டு, தமிழகத்துக்கு 18 பேரை மட்டும் பணியில் அமர்த்தியுள்ளனர். தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் சாதிக்கின்றனர்.
அவர்களை ஊக்குவிப்பதை விடுத்து, மாநிலத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது நியாயமா? மத்திய அரசுக்கு அதிக வரி வசூலித்துத் தரவும், சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடத்தவும் மட்டும் தமிழகம் வேண்டுமா? நிதி ஒதுக்குவதில் ஓரவஞ்சனைதானா? என தெரிவிக்கப்பட்டுள்ளது.