கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தியவர்கள் பலர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்த நிலையில் நேற்று அங்கு சாராயம் குடித்த 6 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து மேலும் சாராயம் குடித்த 80க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலர் ஆபத்தான கட்டத்தை தொட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி விஷ சாராயத்தால் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கள்ளச்சாராய பலி குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.