அதிமுகவில் இருந்து மக்கள் சேவை செய்ய முடியாததால் டிடிவி தினகரன் அணியில் இணைந்ததாக கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்களும், சில எம்பிக்களும் தினகரன் அணியில் உள்ள நிலையில் இன்று காலை திடீரென கள்ளக்குறிச்சி பகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபு தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது அணியில் இணைந்தார்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரபு “ மக்கள் ஆதரவு தினகரனுக்கு இருக்கிறது என்பது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு மூலம் தெரிந்து விட்டது. மேலும், அதிமுகவில் இருந்து கொண்டு சரிவர மக்கள் சேவை செய்ய முடியவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பது முதல்வருக்கு தெரியும். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கள்ளக்குறிச்சி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என நிறைய மனுக்கள் கொடுத்தேன். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. அதனால் தினகரனுடன் இணைந்துள்ளேன். எடப்பாடி முதல்வர் ஆவார் என்று நீங்கள் நினைத்தீர்களா?. அதுபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் யாரேனும் ஒருவர் முதல்வர் ஆவார்” என அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் உள்ள தினகரனின் ஸ்லீப்பர்செல்கள் விரைவில் தினகரனை நோக்கி படையெடுப்பார்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இன்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தினகரன் அணியில் இணைந்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரிவின்போது ஈபிஎஸ் அணியில் இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, முதல்வரின் நம்பிக்கைக்குரியவராக இருந்துவந்த நிலையில் இன்று திடீரென தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.