பரோட்டா சாப்பிட்ட கபடி வீரர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு திருமணம் ஆகி ஒரே ஒரு ஆண்டுதான் ஆனதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தீபக் பாண்டி என்ற கபடி வீரர் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். தீபக் பாண்டி மற்றும் புவனேஸ்வரிக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு அவர் தங்கியிருந்த பகுதியில் உள்ள பரோட்டா கடை ஒன்றில் பரோட்டா வாங்கி, வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட பின் வீட்டு வாசலில் புவனேஸ்வரியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, தீபக் பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணமாகி ஒரே ஆண்டில் தீபக் பாண்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரோட்டா சாப்பிட்டதால் நெஞ்சுவலி ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.