Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல், ரஜினியை கிழி கிழியென கிழிக்கும் வீரமணி: அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட நிலைக்கு ஆளாக வேண்டாம்!

கமல், ரஜினியை கிழி கிழியென கிழிக்கும் வீரமணி: அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட நிலைக்கு ஆளாக வேண்டாம்!

கமல், ரஜினியை கிழி கிழியென கிழிக்கும் வீரமணி: அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட நிலைக்கு ஆளாக வேண்டாம்!
, சனி, 30 செப்டம்பர் 2017 (14:51 IST)
தமிழகத்தின் பிரபல நடிகர்களான ரஜினியும், கமலும் தமிழக முதல்வராக அரசியலுக்கு வர உள்ளதாக கூறியுள்ள நிலையில் அவர்களை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நீண்டதொரு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.


 
 
தமிழ்நாட்டு அரசியலில் சினிமா நடிகர்கள் ஊடுருவி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியின் விளைவுகள் பற்றி  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு:-
 
தமிழ்நாட்டு அரசியலில் நுழையப் போவதாகவும், முதலமைச்சர் ஆகப்போவதாகவும் சினிமாத் துறையில் புகழ்பெற்ற இரு முக்கிய பிரமுகர்கள் அறிவித்துள்ளனர். ஒருவர் ரஜினிகாந்த், இன்னொருவர் கமலகாசன்.
 
அரசியலில் யாரும் நுழையலாம், முதல் அமைச்சர் ஆகவும் ஆசைப்படலாம். அதனைத் தவறாகக் கருத முடியாது அரசியல் சட்டப்படி. அரசியலில் நுழையட்டும், நாட்டுப் பிரச்சினைகளில் நேரிடையாக ஈடுபடட்டும். தாங்கள் வைத்திருக்கும் கொள்கைகளை - திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துக் கூறட்டும்.
 
பிரச்சாரம் செய்யட்டும், களப்பணிகளில் இறங்கட்டும், போராட வேண்டிய தருணத்தில் போராட்டத்தில் குதிக்கட்டும், அதற்காகச் சிறை செல்ல நேர்ந்தால், அதனைச் சிரித்த முகத்தோடு ஏற்றுக் கொள்ளட்டும். இவற்றை எல்லாம் எதுவும் செய்யாமல், பொது வாழ்க்கையில், நாட்டுப் பிரச்சினைகளில் ஒரு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாதவர்கள் நேரடியாக ஆட்சியைப் பிடிப்போம், முதலமைச்சராவோம் என்று சொல்லுவதெல்லாம் வெறும் சிறுபிள்ளைத்தனம் என்று சொல்ல முடியாது, மக்கள் ஏமாளிகள், முட்டாள்கள், சினிமாத்துறையில் தங்களுக்கு இருக்கும் கவர்ச்சியும், ரசனையும், ஈர்ப்பும் போதும், அதுவே நம் கைமுதல், மக்கள் தம் வலையில் வீழ்வார்கள் என்ற நினைப்பு ஆபத்தானது, மோசமானது, நேர்மையற்றதும்கூட.

webdunia

 
 
எதற்காக அரசியலில் நுழைகிறார்கள் என்ற கேள்விக்கு கலைஞானி கமலகாசன் என்ன பதில் சொல்லுகிறார்? ஊழல் ஒழிப்பு என்பதை முன்னிறுத்துகிறார். எல்லா அரசியல்வாதிகளும் வழக்கமாகச் சொல்லும் கிளிப்பிள்ளைப் பாடம்தான் இது. ஊழல் ஒழிப்பு என்பது ஒரு நிர்வாகப்பிரச்னை, அதுவே எல்லாமும் ஆகிவிடாது.
 
முதலில் அவரை நோக்கி ஒரு கேள்வி, கறுப்புப் பணத்தின் நடமாட்டம் மற்ற துறைகளைவிட முக்கியமாக சினிமாத்துறையில்தானே அதிகம். சினிமாவில் வாங்கும் உண்மையான பணத்தைத் தான் வருமான வரித் துறையில் கணக்காகக் காட்டுகிறார்களா? அதுபற்றி இதுவரை ஏதாவது கருத்து சொன்னதுண்டா?
 
முதலில் தான் சார்ந்திருக்கும் துறையில் கறுப்புப் பணத்தை ஒழிக்க முன்வரட்டும். அதற்கான இயக்கத்தை நடத்தட்டும். ‘வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளும்’ என்ற சொலவடைதான் இந்த சினிமா நடிகர்களுக்கும் பொருந்தும்.

webdunia

 
 
ரஜினிகாந்த்தும், கமல காசனும் அரசியலுக்கு வந்தாலும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க மாட் டார்களாம். இதைவிட அறிவு நேர் மையின்மை ஒன்று இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் விமர்சிப்பேன் என்று சொன்னால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். விமர்சிக்க மாட்டேன் என்று சொன்னால், இந்த இடத்தில் யாருக்கும் ஒரு சந்தேகம் வரத்தான் செய்யும். ஒருவருக்கொருவர் பூடக மாகப் பேசி வைத்துக்கொண்டு அரசியலில் இறங்குகிறார்களோ என்று கருத வேண்டியுள்ளது.
 
நீங்களோ பகுத்தறிவுவாதி, ரஜினியோ ஆன்மீகவாதி. இந்த நிலையில் எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும் என்றகேள்விக்கு மழுப்பலான பதில் தான் கமலகாசனிடமிருந்து. நீங்கள் பகுத்தறிவாளர், பாஜக ஆன்மீக நாட்டமுள்ள கட்சி. இப்படி இருக்கும்போது பாஜகவுடன் நீங்கள் ஒருங்கிணைந்து எப்படி செயல்பட முடியும்? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்கிறார் கமல்?

webdunia

 
 
நான் பகுத்தறிவுவாதி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. ஆனால், அதேநேரத்தில் எல்லா கோவில்களையும் தரைமட்டமாக்க வேண்டும் என்று நான் கூறவில்லை என்று பதில் கூறுகிறார். இதிலிருந்து பகுத்தறிவு என்பதில்கூட அவருக்குத் தெளிவு இல்லை என்று தெரிகிறது.
 
பகுத்தறிவுவாதி எவரும் எந்தக் கோயிலையும் தரைமட்டமாக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆன்மீக அமைப்பான பாஜகதானே 450 ஆண்டு வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியது. துணிவிருந்தால் பட்டென்று அதனையல்லவா எடுத்துக் கூறியிருக்க வேண்டும்.
 
காவி, கருப்பு என்பதற்கெல்லாம் எதை எதையோ சொல்லித்தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புகிறார்.  கருப்பு, கருப்புச் சட்டை என்றால் என்ன என்பது சிறுவனுக்கும் தெரிந்த ஒன்று. அதேநேரத்தில் காவி என்றாலும் மக்களுக்கு மிக நன்றாகவே புரியும். இந்நிலையில் திரிபுவாதம் செய்யலாமா? குட்டையைக் குழப்பலாமா? தான் கருப்பு என்று அடையாளம் காட்டி, அதே நேரத்தில் காவியிடம் சரணாகதி என்பதில் உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது.
 
மாநில அரசைக் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு மத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக  உள்ள பிஜேபி ஆட்சி பற்றி விமர்சிப்பதில்லையே என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்கிறார்? முதலில் என் வீட்டை சுத்தப்படுத்துகிறேன் என்று சொல்கிறாரே, மத்தியில் உள்ள ஆட்சியால் தானே நீட் வந்தது, ஜிஎஸ்டி வந்தது, இந்தி வருகிறது, சமஸ்கிருதம் வருகிறது, நவோதயா வருகிறது. இவையெல்லாம் தமிழ்நாட்டுக்குச் சம்பந்தம் இல்லாதவையா? என்னே நழுவல்! இதன் உள்ளார்ந்த அரசியல் பூடகம் என்னவோ?
 
பிஜேபி ஆட்சியை விமர்சிக்க மூன்றுஆண்டுபோதாதாம். இன்னும் ஓராண்டு தேவையாம். அப்படிப் பார்க்கப்போனால் மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி வந்து வெறும் மூன்று மாதம்தானே. அதற்குள் ஏன் அதிரடி விமர்சனம் என்ற கேள்வி எழாதா? பதவி ஆசையில் அவசர அவசர யோசனையில் தடுமாறுகிறார் என்பது மட்டும் தெரிகிறது. மேலும் யாருக்காகவோ பேச முயன்று திணறுவதும் புரிகிறது.
 
பிஜேபி என்பது இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவோம், ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்துவோம் என்று ஒளிவு மறை வின்றி சொல்லுகிற கட்சி. எதிலும் மதவாதக் கண்ணோட்டம் என்பது அதன் குருதியோட்டம். உண்பது முதல் உடுத்துவது வரை எல்லாம் காவி மயச் சிந்தனை.
 
அப்படிப்பட்ட ஒரு கட்சியோடு ஒரு பகுத்தறிவுவாதி, மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ள ஒருவர் எந்த வகையில் கூட்டணி அமைத்துக்கொள்ள முடியும்? கொள்கையில் சமரசம் செய்து கொள்ளக் கூடியவர் என்பது புரிய வில்லையா? இந்த வகையில் இவர் எப்படி தனித்தன்மையானவர்? லஞ்சத்தைவிட மதவாதம் பேராபத்து என்பதைப் புரிந்துகொள்ளாத விசித்திர மான பகுத்தறிவுவாதியாக(?) அல்லவா தோற்றம் அளிக்கிறார்!
 
பகுத்தறிவுக் கொள்கைக்காக கேரள மாநிலத்தில் விருது கொடுத்தால் ஏற்றுக்கொள்வார். தமிழ்நாட்டில் எந்தப் பகுத்தறிவுப் பிரச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். இது ஒருவகைத் தொழில் ரகசியமோ.
 
இன்னும் தீண்டாமை இருக்கிறது, ஜாதி தாண்டவமாடுகிறது, கவுரவக் கொலை என்று புது மகுடம் அணிந்து வருகிறது, மதவாதம் தலை தூக்குகிறது, மதவாதத்தால் வன்முறைகள் தலை விரித்தாடுகின்றன. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற பாசிசம் கொம்புமுளைத்து பாய்கிறது. ஒரு பகுத்தறிவுவாதிக்கு இந்தத் தளத்தில் ஏராளமான பணிகள் அலை அலையாக இருக்கின்றன. இதனைப் புறந்தள்ளிப் பதவி அரசியல் பக்கம் நாட்டம் கொள்வதன் பொருள் என்ன? சுயநலமும், பதவி மோகமும் இரு கால்களாக இருக்கின்றன என்று சொன்னால் அவர் சினம் கொள்ளக் கூடாது.
 
பகுத்தறிவுவாதி என்பவர் இப்படி யென்றால், அவன் இருக்கான் எல்லாம் அவன் பார்த்துப்பான் என்று சொல்லுகிற ரஜினிகாந்த் ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர ஆசைப்படுகிறார். சர்வமும் சர்வேசன் மயம் என்று சொல்லி கடவுளைக் கைகாட்டிவிடுவார். ஆண்டவன் சொல்றான் அடியேன் செய்கிறான் என்று சுலபமாக சொல்லிவிடுவாரே. இது தமிழ்நாட்டில் எடுபடுமா? தமிழ்நாட்டுக்குக்காக இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார்? அவரின் முதலீடுகள் எல்லாம் எந்த மாநிலத்தில் என்ற கேள்விகள்  அவரைத் துரத்திக் கொண்டே இருக்குமே! இவற்றை எல்லாம் தாக்குப் பிடிக்கும் இயல்பை - திறனைக் கொண்டவரா ரஜினிகாந்த்?

webdunia

 
 
ஏதோ தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்ற நினைப்பில் பாஜக என்னும் பாசிச பாம்பு அரியணை ஏற குறுக்கு வழியைத் தேடும் தருணத்தில், இரு முன்னணி சினிமா நடிகர்களும் திராவிட இயக்கத்தைப் பலகீனப்படுத்தி, வாக்குகளைச் சிதறச்செய்து அதன் மூலம் பாஜகவைப் பதவி நாற்காலியில் அமர வைக்கும் குறுக்குவழி  உபாயம் இதன் பின்னணியில் இருக்கிறதோ என்ற ஒரு கருத்தும்கூட உள்ளது.
 
அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட நிலைக்கு நடிகர்கள் ஆளாக வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள் என தனது அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மலையாளிகள் பங்களிப்பு; பிரதமர் புகழாரம்