பாஜகவின் மாயமான் ரஜினியின் அரசியல் கட்சி?: கி.வீரமணி விளாசல்!
பாஜகவின் மாயமான் ரஜினியின் அரசியல் கட்சி?: கி.வீரமணி விளாசல்!
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்துக்கூறிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாஜகவின் மாயமானாக ரஜினியின் அரசியல் கட்சி அமைந்துவிடக்கூடாது என கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது நீண்டு பெரும் மௌனத்துக்கு பின்னர் தனது அரசியல் பிரவேசம் குறித்து நேற்று அறிவித்தார். அப்போது தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் அறிவித்தது திராவிடர் கழகத்தினரிடையே மாற்றுக்கருத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவருடைய கொள்கை என்ன, லட்சியம் என்ன, யாரை எதிர்த்து அவர் நிற்கிறார்? இதையெல்லாம் அவர் தெளிவுபடுத்த வேண்டும். அதன் பின்னர் ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பதை முடிவு செய்வோம்.
இது பெரியாரின் பகுத்தறிவு பூமி. திராவிட இயக்கத்தின் மண்ணில் அதன் அடிப்படைக் கொள்கைக்கு விரோதமாக இங்கு யாரும் வேரூன்ற முடியாது. பாஜகவின் மாயமானாக ரஜினியின் கட்சி அமைந்துவிடக் கூடாது. அதை ரஜினி தெளிவுபடுத்த வேண்டும். ரஜினி ஆன்மீக அரசியல் என கூறியதை தான் கி.வீரமணி பாஜகவின் மாயமான் என குறிப்பிட்டுள்ளார்.