பெரும்பான்மைக்கு இணங்கிப் போகும் காலமெல்லாம் சிறுபான்மை சக்தியற்றதாகவே இருக்கும். இன்னும் சொல்வதென்றால், அது ஒரு சிறுபான்மையாகக் கூட இருக்காது (அதாவது, பொருட்படுத்தத்தக்க ஒரு தரப்பாகவே இருக்காது). - ஹென்றி டேவிட் தோரோ (1817–62)
கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்யின் சர்க்கார் படம் தொடர்ப்பான கதை சர்ச்சைகள், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது தொடர்ப்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகள், நிர்மலா தேவியின் வாக்குமூலங்கள், ரஃபேல் விவாதங்கள், சபரி மலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பானப் பதற்றங்கள், சர்தார் பட்டேல் சிலை உயர விவாதங்கள், மீடூக்கள் என நாம் மறந்துப் போன நபர்கள் இருவர்.
ஒருவர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட ஈச்சம்பட்டி சா.ராஜ லட்சுமி மற்றும் ஒருவர் பீஹார் மாநிலம் சீதாமாரில் எரித்துக் கொல்லப்பட்ட முதியவர் ஸைனுல் அன்சாரி.
நாகரீக சமுதாயம்:
இவை இரண்டும் திட்டமிட்டப் படுக்கொலைகள். இவர்கள் தலித்துகள், இஸ்லாமியர்கள் என்று சமூகத்தை கூறுப்போட தேவை இல்லை. இதையும்தாண்டி நாம் நாகரீக சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோமா என்ற அச்சம் எழுகிறது.
இந்த இருவரையும் தாங்கிக்கொள்ள, ஏந்திக் கொள்ள இந்த சமூகம் தயாராக இல்லை. சாதி வெறிப்பிடித்த, மத வெறிப்பிடித்த மனிதர்களை எப்படி எதிர்க்கொள்வது என்பதை அறியாத இவர்களுக்கு, இந்த சமூகம் தந்த பரிசு தான் இவர்களின் மரணம்.
ஜனநாயக சமூகத்தில் இடம் பெறக் கூடாத இந்த சம்பவங்கள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எந்த சமூகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். மலையை கடுக்காகவும், கடுகை மலையாகவும் காட்டும் ஊடகங்கள் எங்கே போனது? எங்கே போனது அவர்களின் விவாத மேடைகள்? எது வரை அமைதி காப்பது?. எண்ணங்களில் தான் இந்த சமூகம் சுருங்கிப் போனதா? பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பதும் கூட ஒரு வகையில் சமூக வன்முறைதான்.
நம் கடமை:
மரணித்த இவர்களை அரவணைக்க நீதி தேவனுக்கு ஹாஹிம்புரா படுக்கொலை சம்பவங்கள்ப் போல 31 ஆண்டுகள் கூட தேவைப்படலாம். எங்கே போனார்கள் இந்த புன்னகை தேசத்தின் ஆட்சியாளர்கள்? சிரிப்புகளை காட்சியாக நிரப்புவார்கள் எங்கே போனார்கள்? என்று கேட்க தேவை இல்லை. அவர்கள், தொடரும் அவர்களது ஆட்சியின் நாட்கள் எவ்வளவு ஆகஇருந்தாலும், அது வரை அவர்களது சிரிப்பும் குறையாது வாழட்டும்.
சாதியும் மதமும்தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் பரவட்டும் விஷம்! உலக்கிற்க்கு சமூக நீதி சொன்னவர்கள். நமக்கு நாமே சமூக அபராதம் விதித்துக் கொள்ள வேண்டும். நாம் சமூக நீதித் தொடர்ப்பான சமூக அறிவு பெரிது என கொள்வோம். தானத்திலே சிறந்தது ஞான தானம். கொடையிலே சிறந்தது வழிக்காட்டல்கள் தான்.
தளர தேவை இல்லை ! கவலைப்பட தேவை இல்லை ! நம்பிக்கை கொள்வோம்! கப்பல்களுக்கு காத்திருந்து, எரிமலை வந்தால் கூட தயக்கம் இன்றி போர் செய்த கூட்டம் நாம். நமக்கு ஏன் மீண்டும் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார்.
சமூக நீதிக்கு அச்சுறுத்தல்கள் வரும் போதெல்லாம், மனம் துயருற்றீக்கும் போதும், அமைதி இன்றி தவிக்கும் போதும் நம் மனதுக்குள் பெரியார் தான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் அனைவருமே பெரியார் தான். நம் மனதில் நம்மை நாமே காண்போம். வலுவான சமூக நீதியை உடைய புதிய சர்க்கார்க்கள் செய்வோம் ! அதை என் நாளும் காப்போம் !