தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்ற போதிலும் அந்த தொகுதியில் போலி மை உபயோகிக்கப்படுத்தப்பட்டது என புகார் எழுந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஒரு சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர் போட்டியிட்ட தொகுதியில் 100 கோடி ரூபாய் வரை செலவளித்து தான் வெற்றி பெற்றுள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் 100 கோடி ரூபாய் வரை செலவளித்து வெற்றி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பணப்புழக்கம் மட்டுமல்லாமல் அராஜகத்தின் மூலமாகவே தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார். திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெறும் 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.