ஜெயலலிதாவாக மாறிய தீபா: தொண்டர்கள் நெகிழ்ச்சி!
ஜெயலலிதாவாக மாறிய தீபா: தொண்டர்கள் நெகிழ்ச்சி!
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாளான இன்று அவரது உருவ சிலைக்கும் அவரது சமாதிக்கும் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இன்று அவரது தோற்றம் அச்சு அசலாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே இருந்ததாக தொண்டர்கள் கூறுகின்றனர்.
வழக்கமாக சுடிதாரில் தோற்றமளிக்கும் ஜெ.தீபா இன்று சேலை அணிந்து, பொட்டு வைத்து, ஜெயலலிதா போன்றே பெரிய வாட்ச் அணிந்து இருந்தார். ஜெயலலிதா சேலையின் தலைப்பால் தோள்பட்டையை எப்படி மூடிக் கொள்வாரோ அதேபோல் தீபாவும் இன்று தன்னை முழுவதும் தனது அத்தை ஜெயலலிதா போல மாற்றிக் கொண்டு அவரைப் போலவே தோற்றம் அளித்தார்.
அவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தபோது அச்சு அசலாக ஜெயலலிதா போலவே இருந்தார் என்று தொண்டர்கள் அழுததாக பேசப்படுகிறது. அதே குரல், அதே கம்பீரம் என ஜெயலலிதாவை தீபா கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இன்று தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்த தீபா தான் அரசியல் இறங்குவது உறுதி என தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அடுத்த அறிவிப்பு வரும் என அவர் கூறினார்.