போயஸ் தோட்டம் வீடு வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற ஜெயலலிதாவின் சட்டப்படி வாரிசாக உள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்றார். இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அரசின் முடிவை வரவேற்று உள்ளார். மேலும் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழக அரசின் முடிவை நான் வரவேற்கிறேன் என்றும்; அதே நேரத்தில் சட்டப்படி வாரிசுகளாக உள்ள தங்களை கேட்காமல் நினைவில்லாமாக மாற்றக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டிற்கு சொந்தம் கொண்டாடும் உறவினர்களுக்கு சட்ட ரீதியாக இழப்பீடு வழங்கப்படும். அதன்பின்னர் வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்றார்.