திமுக தலைவர் திமுக தலைவர் கருணாநிதியிடம் தனக்கு பிடித்த விஷயம் என்ன என்பது பற்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி தற்போது பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக உடல் நலமின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கையசைவை காண பல தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கின்றனர். மேலும், பல அரசியல் தலைவர்களும் அவரை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கருணாநிதி பற்றிய பல செய்திகளும், பல தகவல்களும் வெளியாகின்றன. குறிப்பாக பல வருடங்களாக கருணாநிதியை அரசியல் எதிரியாக கருதிய ஜெயலலிதா, கருணாநிதி பற்றி கூறிய பல செய்திகள் வெளிவந்துகொண்டிக்கிறது.
ஒருமுறை, பத்திரிக்கையாளர் ஒருவர், கருணாநிதியின் காலத்திற்கு பிறகு உங்கள் அரசியல் எப்படி இருக்கும் என கேட்டதற்கு, நான் அரசியலை விட்டு ஒதுங்கிவிடுவேன் என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
ஏன், என பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, அவரை எதிர்த்து அரசியல் செய்யவே, நான் எனக்கு பிடிக்காத அரசியலுக்குள் நுழைந்தேன். அவர் காலத்திற்கு பிறகு யாரை எனக்கு தகுதியான எதிரியாக நினைத்து அரசியல் செய்ய முடியும் என பதில் அளித்துள்ளார்.
அதேபோல், கருணாநிதியிடம் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? என நிருபர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த ஜெயலலிதா “ எம்.ஜி.ஆர் 13 வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த போது, அந்த 13 வருடங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகவை அவ்வளவு கட்டுக்கோப்பாக, மனவலிமையுன் கட்டி காப்பாற்றியது அவரிடம் உள்ள சிறப்பு என பதிலளித்தார்.
மேலும், நிருபர்கள் கேள்வி கேட்கும்போது சட்டென்று எதிர்பாராத வகையில் சிலேடையாக பதிலளிக்கும் அவரது டைமிங் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
அதேபோல், ஜெயலலிதாவிடம் தனக்கு பிடித்த விஷயங்கள் பற்றி கருணாநிதியும் பகிருந்துள்ளார்.
வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதியிடம் ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவிடம் எனக்கு பிடித்த விஷயம் அவருடைய நடிப்பு மற்றும் நடனம் எனவும். பிடிக்காத விஷயம் காழ்ப்புணர்ச்சி அரசியல் என்று சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவை மட்டுமல்ல யாரையுமே நான் அரசியல் எதிரியாக கருதியது இல்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.