அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு... என்ற வரிசையில் அடுத்த அதிரடி அம்மா திட்டமாக, அம்மா மருந்தகம் தொடங்கப் பெற்றுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அமைந்த 10 அம்மா உணவகங்களை 2014 ஜூன் 26 அன்று ஜெயலலிதா திறந்து வைத்தார். இங்கு நியாயமான விலையில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2014 ஜூன் 26 அன்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறையின் சார்பில் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 90 லட்சம் ரூபாய் செலவில் கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 9 அம்மா மருந்தகங்களைத் திறந்து வைத்தார்.
நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத் துறையால் புதிதாக அம்மா மருந்தகங்கள் தொடங்கிட, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை காணொலிக் காட்சி மூலமாக ஜெயலலிதா, 2014 ஜூன் 26 அன்று திறந்து வைத்தார்.
மேலும், கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம்; ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்; மதுரை மாவட்டம் - பேரையூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் கே.கே. நகரில் அமைந்துள்ள மதுரா கோட்ஸ் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை; சேலம் மாவட்டம் - செர்ரி ரோட்டில் அமைந்துள்ள சேலம் என்.ஜி.ஓ. கூட்டுறவு பண்டக சாலை மற்றும் தாரமங்கலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; சிவகங்கை மாவட்டம் - காரைக்குடியில் அமைந்துள்ள சிவகங்கை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; விருதுநகர் மாவட்டம் - சிவகாசி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகிய இடங்களில் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் அமைந்துள்ள 9 அம்மா மருந்தகங்களையும் திறந்து வைத்தார்.
ஜெயலலிதா திறந்து வைத்துள்ள அம்மா மருந்தகங்கள், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையங்கள், மார்க்கெட் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகளைச் சிறப்பாகப் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதனப் பெட்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கணினி பயிற்சி பெற்ற விற்பனையாளர்களோடு வெளிக்கொணர்வு முறை மூலம் மருந்தாளுநர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு செல்லூர் கே. ராஜூ, மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் திரு ஆர். காமராஜ், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் திருமதி எம்.பி. நிர்மலா, இ.ஆ.ப., உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் திரு கோபாலகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் சந்திரசேகரன், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.