Publish Date: Tue, 06 Mar 2018 (17:32 IST)
Updated Date: Tue, 06 Mar 2018 (17:39 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை நேரில் பார்த்ததாக அவரின் கார் ஓட்டுனர் கண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சசிகலா குடும்பத்தினர் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. மேலும், ஆளுநர் உட்பட யாரையும் அவரை பார்க்க சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை. எனவே, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது.
எனவே, அவரின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின், ஜெ.விற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டனில் பணிபுரிந்தவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், 1991ம் வருடம் முதல் ஜெ.விடம் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த கண்ணன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5வது நாள் ஜெயலலிதாவை பார்த்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது காரில் பின்னால் சென்றதாகவும் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.