பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான வியட்நாம் சுந்தரத்தின் மறைவு குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட திரைக்கதை ஆசிரியரும், இயக்குநரும், நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் இன்று அதிகாலை (6.8.2016) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் திரையுலகம் கண்ட மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் ஆவார். 1970-ஆம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக திரையுலகில் அறிமுகமானார். இவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த நான் ஏன் பிறந்தேன், நாளை நமதே ஆகிய படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக இருந்ததோடு, பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் குடும்பப்பாங்கான கதைகளை இயக்குவதில் வல்லவர்.
வியட்நாம் வீடு சுந்தரம் வியட்நாம் வீடு திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது, அறிஞர் அண்ணா விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார். எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான வியட்நாம் வீடு சுந்தரம் மறைவு தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு பேரிழப்பாகும்.
வியட்நாம் வீடு சுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.