போயஸ்கார்டன் வீட்டிலிருந்து, மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போதே ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது என இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.
ஜெ.வின் மர்ம மரணம் குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்து கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ் அணி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்நிலையில் ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் 5 மருத்துவ அறிக்கைகளும் தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையில் புதிய தகவல் எதுவுமில்லை எனவும், ஏற்கனவே அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட அதே தகவலைத்தான் எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்ற கருத்து வெளியானது.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் மாநிலத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் போதே ஜெ.வின் உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, மருத்துவர்கள் மீது யாரும் குறை கூறாதீர்கள். ஜெ.விற்கு மொத்தம் 31 மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். அவர்கள் அனைவருமா பொய் சொல்லுவார்கள்? நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதுதான் மருத்துவர்கள் வேலை. இதை அரசியலாக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம்.
ஜெ.வின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் 75 நாட்கள் போராடினார்கள். அதையும் மீறி அவர் மரணம் அடைந்துவிட்டார். நமக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும். அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்காதது குறித்தோ, சிசிடிவி கேமரா பதிவுகள் இல்லை என்பது பற்றி நாங்கள் விளக்கம் தர முடியாது” என அவர் கூறினார்.