திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மே 2ம் தேதி இரவு முதல் மாயமான நிலையில், மே 3 மாலையில் அவரைக் காணவில்லை எனக்கூறி அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் மே 4 ஆம் தேதி ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் போலீசார் தடயங்களை சேகரித்து நிலையில், ஜெயக்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் இறப்பு தொடர்பாக சந்தேகம் உள்ள நபர்களிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தினர். அவர் எழுதிய புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், பள்ளி தாளாளர் ஜெய்கர், ஆஜந்த்ராஜா, குத்தாலிங்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதன்படி, தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபி மனோகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருவருக்கும் இடையே உள்ள பணப்பரிமாற்றம் தொடர்பாக போலீசார் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. ஜெயக்குமார் மரணம் தொடர்பாக சம்மன் அனுப்பிய நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.