திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுகவுக்கு கெடுவிதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
'தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின் ஒப்புதல் இல்லாமல் அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் எம் யாக்கூபை ஒருமையில் திட்டிய மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனாவை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது.''
அமைதியான முறையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வஞ்சக நெஞ்சத்துடன் காவல் துணை ஆணையாளர் பவன்குமார் தலைமையில் மிக மோசமான தடியடியை நடத்தி இருக்கிறார்கள். இதில் பல ஆண்கள் காயமடைந்துள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும் தடியடிக்கு உட்பட்டுள்ளனர்.'
''அத்துமீறி நடந்து கொண்ட துணை ஆணையாளர் பவன் குமார் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். தாம்பரம் ஆணையாளர் அழகு மீனா மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனும் கேட்டுக்கொள்கிறேன். எமது இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் எமது தலைமை நிர்வாக குழு அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்கும்.