குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 3 வாரங்களுக்கும் மேல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. படிப்படியாக மழை குறையும் என வானிலை மையம் கூறியிருந்தது. ஆனாலும், மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளமான இடங்களில் நீர் தேங்கியுள்ளது. மேலும், பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் “குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. அதனால், அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து மழை அமையும். இதன் விளைவாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அவர் தெரிவித்தார்.
மேலும், வடகிழக்கு பருவமழை தற்போது வரை 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. தமிழிகத்தில் அதிக பட்சமாக பொன்னேரியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.