சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது சில ஆவணங்களில் அவர் கையெழுத்தை பெற முயன்றதாகவும், அதை அவர் மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் கிளீன் மணி என பெயரிடப்பட்ட சோதனையில் சசிகலா குடும்பத்தினர் பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கியது. மொத்தமாக ரூ.1500 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள், கிலோக்கணக்கில் தங்க, வைரை நகைகள் சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக் வசமாக சிக்கியுள்ளார் எனக்கூறப்படுகிறது. ஜெயா தொலைக்காட்சி மற்றும் ஜாஸ் சினிமாஸை இவர்தான் நிர்வகித்து வருகிறார். இவரின் வீட்டில் கடந்த 9ம் தேதி அதிகாலை தொடங்கிய சோதனை நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் முடிவிற்கு வந்தது. இதில் பல ஆவணங்களை அதிகாரிகள் அள்ளி சென்றனர். மேலும், அவரை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், மீண்டும் அவரிடம் விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.
சோதனையின் போது சில ஆவணங்கலில் கையெழுத்து போடச் சொல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் விவேக்கிடம் கேட்டிருக்கிறார்கள். ஒரு தருணத்தில் கையெழுத்து போடச்சொல்லி மிரட்டும் தொனியிலும் பேசியிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் பரவாயில்லை. நான் கையெழுத்து போட மாட்டேன். நீங்கள் என்னை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வருகிறேன். அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். ஆனால், நீங்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்க முடியாது என கெத்தாக பேசினாராம் விவேக். இந்த தகவல் உடனே டெல்லிக்கும் கூறப்பட்டதாம்.
மேலும், அதிகாரிகள் கிளம்பும் போது ‘ தம்பி..இதோடு முடிந்துவிடும் என நினைக்காதீர்கள். நீங்கள் விசாரணைக்கு வர வேண்டியிருக்கும். நாங்களும் வருவோம்’ என எச்சரித்துள்ளனர். ஆனால், எப்போது வேண்டுமானாலும் வாங்க. நான் ரெடியா இருக்கேன்’ என சிரித்துக்கொண்டே பதிலளித்தாராம் விவேக்.