Publish Date: Tue, 01 Aug 2017 (17:59 IST)
Updated Date: Tue, 01 Aug 2017 (18:13 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமானத்துறை அதிகாரிகள் முடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலரின் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ரூ.5 கோடி பணமும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியது.
இதனையடுத்து, அது தொடர்பாக விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் சென்று கடந்த சில நாட்களாக விளக்கம் அளித்தனர்.
அந்நிலையில், விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என புகார் எழுந்தது. விஜயபாஸ்கரை அழைத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தியதாகவும், ஆனால், அதற்கு விஜயபாஸ்கர் மறுத்து விட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியானது.
அதன்பின், விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் அவரது தந்தை ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், அவரின் சொந்த ஊரான திருவேங்கைவாசலில் உள்ள அவரது 100 ஏக்கர் நிலம் மற்றும் குவாரிகளை முடக்குமாறு, புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். எனவே, விரைவில் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் எனத் தெரிகிறது.