இன்னும் 3 நாட்களுக்கு பின் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தின் இறுதியிலும், இந்த மாத முதல் வாரத்திலும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
அந்நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தமிழகத்தில் பெரிதாக மழை இல்லை. மேலும், மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரனும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் எப்போது மழை பெய்யும் என்பது குறித்து கருத்த தெரிவித்த பிரதீப் ஜான் ‘ காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசாவை நோக்கி சென்றுவிட்டது. எனவே, அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இதனால், உள் வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்காது. ஆனால், 19ம் தேதிக்கு பின் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். அதன் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், இந்த மாத இறுதியிலும் மழை பெய்யும்” என அவர் தெரிவித்துள்ளார்.