மக்களவை தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிட் இழந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் முன்னாள் பொதுச்செயலாளரான ஜெயலலிதா மறைந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தால் தலைமைக்கு பெரும் போட்டி நடந்தது. இதில் சசிக்கலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை ஓரம் கட்டி எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுசெயலாளராக தற்போது செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக சில இடங்களில் டெபாசிட் இழந்ததும், சில இடங்களில் வாக்கு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதும் அதிமுக வீழ்ச்சி அடைகிறதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் சரிவுக் குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் “கட்சியை கைப்பற்றுவது முக்கியமல்ல, காப்பாற்றுவதுதான் முக்கியம். சிலர் கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து விடுமோ என சுயநலத்துடன் செயல்படுகிறார்கள். கட்சியின் தொண்டர்களை, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பெருந்தன்மையான முடிவுகளை எடுக்க வேண்டும்” என மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இதற்கு பதிலடியாக பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி “ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு பிரிந்து சென்ற பிறகு கடந்த மக்களவை தேர்தலை விட 1 சதவீதம் அதிக வாக்குகளை பெற்றுள்ளோம். இது அதிமுக வளர்ந்து வருவதையே காட்டுகிறது” என கூறியுள்ளார்.