வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் மீண்டும் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. வெயிலுக்கு நடுவே பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இனி மெல்ல வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மாலத்தீவு முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 17ம் தேதி வரை இதே நிலை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு பகுதிகளில் லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K