தேனியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக தகவல் வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சமாதானம் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா-வின் 76வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த ஆர்.பி.உதயக்குமார் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறி தேனி விரைந்தார்.
தேனி சென்றதற்கு காரணமாக தேனியின் முன்னாள் எம்.பி. பார்த்தீபன் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியது.,
கண்டமனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த முன்னாள் எம்.பி. பார்த்தீபனை இடை மறித்து பேச்சுவார்த்தை நடத்தி கையோடு தனது காரிலேயே உசிலம்பட்டியில் நடைபெற்று முடிந்திருந்த கூட்ட மேடைக்கு அழைத்து வந்தார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்.
பின்னர் முன்னாள் எம்.பி. பார்த்தீபனை செய்தியாளர்களிடம் பேச வைத்தார். அப்போது பேசிய பார்த்தீபன், கடமலைகுண்டு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது ஆர்.பி.உதயக்குமார் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் சந்தித்தோம் என்றும் தேனியில் எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நான் பாஜகவில் இணைய உள்ளேன் என வெளியாகும் செய்தி யாரோ வேண்டுமென்றே கிளப்பி விடப்பட்ட தவறான தகவல் எனவும் தெரிவித்தார். மாற்றுக் கட்சியில் இணையும் சிந்தனைக்கே இடமில்லை அதிமுக எனது ரதத்தில் ஊறிய கட்சி என முன்னாள் எம்பி பார்த்திபன் குறிப்பிட்டார்.