அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், அந்த மாணவியரிடம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் ஒரு மணி நேரம் தனியாக விசாரணை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை ஹைகோர்ட் போலவே, தேசிய மகளிர் ஆணையம் தானாகவே இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக சென்று சம்பவ இடத்தை பார்வையிட்ட தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்கள், அதன் பின் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் அனைவரிடமும் விசாரணை செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவி, அவரது தோழிகள், மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் என அனைவரிடமும் மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட மாணவியிடம் தனியாக ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவி, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கண்ணீருடன் கூறியதாகவும், இதை அனைத்தையும் வாக்குமூலமாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை படித்து பார்த்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள், மாணவியரிடம் சில சந்தேகங்களும் தகவல்களையும் பெற்றதாகவும், போலீசார் அளித்த தகவல்களும் மாணவி கூறிய தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டு பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.