Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகின் மிகச்சிறந்த டிஜிட்டல் நாடு இந்தியா - ஆளுநர் பெருமிதம்!

Advertiesment
உலகின் மிகச்சிறந்த டிஜிட்டல் நாடு இந்தியா - ஆளுநர் பெருமிதம்!
, புதன், 5 ஏப்ரல் 2023 (12:54 IST)
கே.ஜி.நிறுவன நிகழ்ச்சியில்  சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர் பேசியதாவது,
 
 
கே.ஜி.நிறுவன நிகழ்ச்சியில்  சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர் பேசியதாவது, 'சமூகத்திற்கு பல்வேறு வகையில் பங்களிப்புகளை செலுத்தி வரும், இன்று விருது பெற்ற ஆளுமைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவர்கள் போன்று பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிபவர்களால் தான் இந்தியா உருவாக்கப்படுகிறது. கே ஜி மருத்துவ நிர்வாகத்தின் 49 வது ஆண்டு விழாவாக இந்நிகழ்வுள்ளது.
இதன் நிறுவனர் 50 வருடங்களுக்கு முன்பே மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என முடிவெடுத்து சேவை செய்துள்ளார்.
 
மருத்துவம், கல்வி, ஆன்மீகம் என பல்வேறு துறைகளில் இந்நிறுவனம் சிறந்த சேவையை வழங்கி வருகிறது. ஸ்ரீ ராமர் குறித்து எழுத வேண்டும் என கம்பர் எண்ணியது போல, இந்த சமூகத்திற்கு உன்னதமான சேவையை வழங்க வேண்டும் என இந்நிறுவனத்தின் நிறுவனர் எண்ணியுள்ளார். இந்த நிறுவனம் சிறப்பான சேவையை தற்போது வரை வழங்கி வருகிறது.
 
கடந்த காலங்களில் நமது நாட்டு மக்களுக்கு மருத்துவம், கல்வி ஆகியவை கிடைக்காத சூழல் இருந்து வந்தது. அடிப்படை தேவைகள் கிடைக்காமல் வறுமை நிலவி வந்தது. இதனைப் பூர்த்தி செய்ய பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் அமைக்கப்பட்ட போதும் சில மக்களுக்கு மருத்துவ சேவையை கிடைக்கவில்லை.
 
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பும் ஆங்கிலேயர்களின் எண்ணத்தை போன்றே நமது நாட்டை மொழியாலும், இனரீதியாகவும் பிரித்த கண்ணோட்டம் நிலவி வந்ததே இதற்கு காரணம்.
இந்த நிலையில் இந்தியாவை ஒரே நாடாக கருதி பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்பு இந்த நிலைமை மாறியுள்ளது.
 
மருத்துவம், கல்வி, குடிநீர், கேஸ் எரிவாயு, வீடு ஆகியன அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி நடைபெற்று வருகிறது. உலகின் மிகச்சிறந்த டிஜிட்டல் சேவைகள் உள்ள நாடாக இந்தியா உள்ளது.
 
இன்று இணையதள பயன்பாடு அனைவருக்கும் சென்றுள்ளது. தனி மனிதரின் இணையதள பயன்பாட்டு அளவு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அனைத்து பகுதிகளுக்கும் தொழில்நுட்பங்களை கொண்டு சென்றதும், அவற்றின் விலையை  குறைத்ததும் தான்.
 
உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியாவை உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன.இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதமாக மகளிர் சக்தி உள்ளது. மகளிர் சுகாதாரம், அவர்களுக்கான கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.சமூக நீதிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும், மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக நீதி சார்ந்த பிரச்சனைகளையும் செய்தித்தாள்களில் காண முடிகிறது.
 
ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பிரிவினை வாத அரசியலை தவிர்த்தால் தான் சமூக பிரச்சனைகளை சரி செய்ய முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருத வேண்டும்.
 
அந்த வகையில் தான் மருத்துவ காப்பீடு திட்டமாக 5 லட்சம் ரூபாய் வழங்கும் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்தியா உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்துள்ளது. அதற்குப் பிறகான பிரிவினைவாத அரசியலால் தான் நமது நாடு பின்தங்கி இருந்தது.1951 ஆம் ஆண்டில் இருந்த சாதிப் பிரிவுகள் இன்று இரட்டிப்பு எண்ணிக்கையாக அதிகமாகியுள்ளது. அது சார்ந்த பிரச்சனைகளும் அதிகமாகியுள்ளது.
 
சாதிகளும் சாதிக்குள்ளான உட்பிரிவுகளும் போன்ற பிரிவினை எண்ணங்களும் நமது நாட்டை பாதித்து வருகின்றன. நாம் அனைவரும் ஒரே மரத்தின் இலைகளைப் போன்றவர்கள். ஒரே குடும்பத்தினர்.மொழி, நிலம், இனம் ஆகியவற்றை தாண்டி நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருத வேண்டும். அதை நோக்கி தான் இந்தியா சென்று வருகிறது.
 
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடாக திகழும். இது மக்களின் பங்களிப்பால் தான் சாத்தியமாகும். தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் என பல்வேறு துறைகளில் இந்தியா தலைமைத்துவத்தில் உள்ளது. இதில் நமது நாட்டின் இளைஞர்களின் பங்கு முக்கியமாக உள்ளது. நமது நாட்டின் நூறாவது சுதந்திரத்தை கொண்டாடும் சூழலில் இந்தியா உலக நாடுகளுக்கு தலைமையாக திகழும்' என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான மத்திய அரசின் தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு