Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட்க்கு எதிராக இந்தியா கூட்டணி கிளர்ந்தெழும்..! - மு.க.ஸ்டாலின் கடிதத்திற்கு ராகுல்காந்தி பதில்!

Rahul Gandhi

Prasanth Karthick

, ஞாயிறு, 14 ஜூலை 2024 (15:10 IST)

நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ராகுல்காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

சமீபமாக நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆரம்பம் முதலே தமிழகத்தில் நீட் எதிர்ப்பு மனநிலை இருந்து வருகிறது. இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்திக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் எனவும், தமிழக அரசை போலவே கூட்டணி மாநில கட்சிகளும் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் நீட்க்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி “ஜூன்‌ 28, 2024 தேதியிட்ட உங்கள்‌ கடிதத்திற்கு நன்றி. நீட்‌ தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில்‌ உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள்‌ மீது உண்டாக்கும்‌ பாதிப்பு குறித்தும்‌ இது கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, ஜூன்‌ 4, 2024 அன்று நீட்‌-இளநிலை முடிவுகள்‌ குறித்த தேதிக்கு முன்னரே வெளியான பிறகு, மாணவர்களின்‌ நீதிக்காகக்‌ காங்கிரஸ்‌ கட்சி போராடி வருகிறது. ஒன்றிய அரசு மற்றும்‌ தேசிய தேர்வு முகமையின்‌ பெருந்தோல்வியால்‌ பாதிக்கப்பட்டுள்ள்‌ ஆயிரக்கணக்கான மாணவர்களைக்‌ கடந்த ஒரு மாதத்தில்‌ சந்தித்தேன்‌. 24 லட்சம்‌ மாணவர்களுக்கு விரைவில்‌ நீதி கிடைக்க வேண்டும்‌.
 

குடியரசுத்‌ தலைவர்‌ உரைக்கு நன்றி தெரிவிக்கும்‌ தீர்மானத்தின்‌ மீதான விவாதத்தின்போது நான்‌ ஆற்றிய உரையும்‌, நீட்‌ தேர்வால்‌ ஏழை மாணவர்களுக்கு ஏற்படும்‌ பாதிப்புகள்‌ குறித்து கவனத்தை ஈர்த்தது. தனியார்‌ பயிற்சி நிறுவனங்களுக்குச்‌ செல்ல முடியாததும்‌ பிற வசதிவாய்ப்புகள்‌ இல்லாததும்‌ கிராமப்புறத்தில்‌ உள்ள திறமையான மாணவர்கள்‌ சமவாய்ப்புடன்‌ போட்டி போட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நம்முடைய பொதுக்‌ கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும்‌.

மக்களின்‌ வரிப்பணத்தில்‌ நடத்தப்படும்‌ அரசு மருத்துவக்‌ கல்லூரிகளில்‌ வசதிவாய்ப்புள்ள சிலருக்கு மட்டும்‌ வாய்ப்பு கிடைப்பதைத்‌ தடுக்கும்‌ கூட்டுக்கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக்‌ கல்வி முறையைக்‌ கட்டமைப்பதில்‌ தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன்‌ விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைப்‌ பலவீனப்படுத்தும்‌ எந்தவொரு முயற்சியும்‌ கட்டாயம்‌ கண்டிக்கப்பட வேண்டும்‌.

தங்களின்‌ கடிதத்துக்காக மீண்டும்‌ ஒருமுறை நன்றி. விரைவில்‌ தங்களைச்‌ சந்திக்க ஆவலுடன்‌ காத்திருக்கிறேன்‌” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மாலை முதல் 5 மாவட்டங்களில் காத்திருக்கு கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?