சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் இன்று காலை திடீரென வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது என்பது அரிதான விஷயமாக இருந்து வரும் நிலையில் இன்று திடீரென அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
முறையாக வரி செலுத்தவில்லை என கூறியும், தேர்தல் பணப்பட்டுவாடா புகார் பற்றி விசாரணை செய்யும் விதமாகவும் விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை நடைப்பெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.
அமைச்சரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டை மற்றும் சென்னை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள கல்லூரி, கல் குவாரி ஆகிய இடங்களில் சோதனை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், இந்த சோதனை குறித்து இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.