Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் கெடு விதிப்பதா? - ஸ்டாலின் கண்டனம்

Advertiesment
ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் கெடு விதிப்பதா? - ஸ்டாலின் கண்டனம்
, வெள்ளி, 8 ஜூலை 2016 (21:49 IST)
ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு கெடு விதிப்பது, கெடுபிடி செய்வது எல்லாம் மக்களுக்கு நலன் பயக்கும் நடவடிக்கையாக அமையாது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் மாதத்திற்குள் “ஆதார்” கார்டு விவரங்களை கொடுக்காவிட்டால் சமையல் காஸ் மானியம் ரத்தாகும் என்று எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
 
ஏற்கனவே சமையல் காஸ் இணைப்பு வைத்துள்ளவர்கள் சந்தை விலையில் காஸ் சிலிண்டரை வாங்கி வருகிறார்கள். பிறகுதான் அவர்களுக்குரிய மான்யத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த முறையிலும் திடீரென்று மாற்றம் செய்து, “ஆதார் கார்டு கொடுத்தால் தான் மான்யம்” என்று வலியுறுத்துவதும், அப்படி ஆதார் கார்டு விவரங்களை தராத வாடிக்கையாளர்களுக்கு மான்யத் தொகை நிறுத்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
 
எண்ணெய் நிறுவனங்களின் இது போன்ற முயற்சி ஏழை எளிய மக்களை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக தாய்மார்களுக்கு பெரும் சிரமத்தை அளிக்கும் முடிவாக அமைந்து விடும். பெட்ரோல், டிசல் விலை உயர்வு என்றாலும் சரி, சமையல் காஸ் சிலிண்டருக்கு கொடுக்கப்படும் மான்யத்தை நிறுத்துவோம் என்பதாக இருந்தாலும் சரி, எண்ணெய் நிறுவனங்களின் இஷ்டத்திற்கு முடிவு எடுக்க மத்திய அரசு அனுமதிப்பது மக்களுக்கு மிகுந்த துயரத்தை அளிக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆதார் கார்டு வழங்குவது குறித்தும், அதன் அவசியம் குறித்தும் செய்தி தாள்கள், எலெக்ட்ரானிக் மீடியாக்கள், ரேடியோ, டெலிவிஷன் போன்றவற்றில் விளம்பரம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று “ஆதார் கார்டு” தொடர்பான வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதேபோல் “அரசின் பயன்களைப் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று எந்த ஒரு குடிமகனையும் வற்புறுத்தக் கூடாது” என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படியொரு சூழலில் “சமையல் காஸ் சிலிண்டர்” மான்யம் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம்” என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறுவது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளுக்கு முற்றிலும் எதிரானது.
 
மான்யம் பெறும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்கு விரோதமானது. அரசின் நலத்திட்டங்களை, மான்யங்களைப் பெறுவதற்குரிய சான்றுகளைக் கேட்பது வேறு. “இந்த குறிப்பிட்ட சான்று இருந்தால் மட்டுமே அரசின் பயன்கள் கிடைக்கும்” என்று கெடுபிடி செய்வது வேறு. ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு “கெடு விதிப்பது” “கெடுபிடி செய்வது” எல்லாம் மக்களுக்கு நலன் பயக்கும் நடவடிக்கையாக அமையாது.
 
ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும் என்று கோருவது  மான்யம் பெறும் சமையல் காஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் மறைமுகத் திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது.
 
ஆகவே ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி வங்கிக் கணக்கு குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மான்யத்தை வழங்க வேண்டும் என்றும், மான்யம் அளிப்பதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்ற முடிவினை எடுக்க எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேமுதிக கூடாரமே காலி; என்னை தாக்க யார் இருப்பார்கள்? - சந்திரகுமார் கேள்வி