Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக வென்றால் தமிழ்நாட்டை “அம்மா நாடு” என்று அறிவித்து விடுவார் - கருணாநிதி

அதிமுக வென்றால் தமிழ்நாட்டை “அம்மா நாடு” என்று அறிவித்து விடுவார் - கருணாநிதி
, சனி, 14 மே 2016 (15:42 IST)
தப்பித் தவறி இந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று விட்டால், “தமிழ்நாடு”  என்ற பெயரை மாற்றி “அம்மா நாடு” என்று 110வது விதியின் கீழ் அறிவித்து விடுவார் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “15வது சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 24 மணி நேரமே உள்ளது! ஆடம்பரம், ஆணவம், அகம்பாவம் ஆகியவற்றின் உச்சியிலே அமர்ந்துள்ள ஜெயலலிதா, கடந்த ஐந்தாண்டு காலத்தில் யாரையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை; “எனது அரசு” - “நான் அறிவிக்கிறேன்” என்று அவர் விடுத்த ஒவ்வொரு அரசு அறிக்கையிலும் தொக்கி நிற்கும் தன் முனைப்புத் தொனியை யாரும் மறக்கவில்லை.
 
எந்த எதிர்க் கட்சியினரையும் பேரவையில் ஜனநாயக ரீதியாக  எதிர்க் கருத்துகளைப் பேசவோ, ஆக்க பூர்வமாக விமர்சிக்கவோ, குரல் எழுப்பவோ அனுமதிக்கவில்லை என்பதை நாடே கவலையுடன்  பார்த்துக் கொண்டிருந்தது. 2011ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தவுடன், வாரந்தோறும் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று ஜெயலலிதா தான் கூறினார்.
 
ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவும் இல்லை.  முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்கவும் இல்லை.   அதுபோலவே அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளையோ, விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளையோ, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையோ இந்த ஐந்தாண்டு கால வரலாற்றில் சந்தித்தது உண்டா என்றால் அதுவும் கிடையாது.
 
தற்போது தேர்தல் என்றதும், “மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்” என்று கபட வேடம் போடுகிறாரே, அந்த மக்களை எங்கேயாவது, எந்த மாவட்டத்திற்காவது சென்று கடந்த ஐந்தாண்டுகளில் சந்தித்தது உண்டா என்றால் அதுவும் கிடையாது தான். குறிப்பாக விளக்க வேண்டுமானால், “மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்” என்பதற்கு மாறாக “எனக்காக நான்,  எனக்காகவே நான்; சசிகலா மற்றும் பரிவாரங்களுக்காக மட்டுமே நான்” என்று சொல்லிக் கொள்ளலாம்.
 
தப்பித் தவறி இந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று விட்டால்,  இதைத் தான் மறுபடியும் அவரே சொல்லிக் கொள்வார். “தமிழ்நாடு”  என்ற பெயரை மாற்றி “அம்மா நாடு” என்று 110வது விதியின் கீழ் அறிவித்து விடுவார்.
 
2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பத்து மாத காலத்தில்  பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, ஆகியவற்றைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வினை ஒரேயடியாக 37 சதவிகித அளவிற்கு உயர்த்தி அறிவித்தார்கள்.  
 
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திலே எந்தத் தரப்பினராவது  திருப்தி யாக இருந்தது உண்டா? கழக ஆட்சியில் நியமனம் பெற்ற காரணத்திற்காக மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப் பெற்று, அவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று அவர்களுக்குச் சார்பாக தீர்ப்பு பெற்ற பிறகும் மீண்டும் அவர்களைப் பணியிலே நியமிக்க மனம் வரவில்லை என்றால் அது கல் நெஞ்சத்தின் அடையாளம் தானே? பிறகு தன்னைத் “தாய்” என்று அழைத்துக் கொள்வதற்கு என்ன தகுதி?
 
இன்னும் எத்தனையோ அட்டூழியங்கள், அராஜகங்கள், அதிகார அத்துமீறல்கள், அநியாயங்கள்!  இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் காரணமான அதிமுக ஆட்சி மீண்டும் தொடரலாமா? ஏற்கனவே இந்த ஐந்தாண்டுகளில் காடாகி விட்ட நாடு, பாலைவனமாகிப் பாழாகிப் போய் விடாதா?
 
தமிழ்நாட்டு மக்கள் இனியும் அதை அனுமதிக்கலாமா? 234 தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று நான் எழுதியவுடன், எல்லாவற்றிலும் “காப்பி” அடிக்கும் ஜெயலலிதாவும் என்னைப் பின்பற்றி, 234 தொகுதிகளிலும் அவரே வேட்பாளராக நிற்பதாக இன்றைய அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார். 
 
என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளாம், தமிழ்ப் பெருமக்களே, கழகத்தைப் பொறுத்தவரை 234 தொகுதிகளிலும், நான் அல்ல, பேரறிஞர் அண்ணாவே போட்டியிடுகிறார்; தந்தை பெரியாரே போட்டியிடுகிறார்; திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது; உண்மையான திராவிட இயக்கம் போட்டியிடுகிறது.
 
பெருவாரியாக உங்களுடைய வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்து, தமிழகத்திலே நடைபெறுகின்ற அராஜக, கொடுங்கோன்மை ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் ஆழக் குழி தோண்டிப் புதைத்திட உறுதி மேற்கொள்ள வேண்டிய நேரம் இது!
 
உண்மையானதொரு ஜனநாயக ஆட்சி உதயமாக உங்கள் அனைவருடைய நல்லாதரவையும் வேண்டி எனது அன்பான கோரிக்கையினை உங்கள் முன் வைக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா சீனா எல்லையில் ராணுவம் குவிப்பு: மீண்டும் அத்துமீறும் சீனா